ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் கைது.. நீதிமன்றம் உத்தரவு
காரில் கடத்தி சென்று 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 17-ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கவுஸ் என்பவரை காரில் கடத்திச் சென்று 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய நான்கு நபர்கள் திருவல்லிக்கேணி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன் மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் மட்டும் தனியாக, கடந்த மூன்று மாதங்களில் 4 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும், அதன் மூலம் சுமார் ஒரு கோடி வரை பணம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.
மேலும், சைதாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மட்டும் தனியாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்து வந்துள்ளதும் தெரியவந்தது. சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு வழிப்பறி செய்த பணத்தில் ஜாம் பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து இருப்பதும், ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தபோது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு மூன்று முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தமாக திருவல்லிக்கேணி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், சைதாப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமானவரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய ஐந்து நபர்களும் இணைந்து பூக்கடை, ராயபுரம், நேப்பியர் பாலம், திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு பல்வேறு அசையும் அசையா சொத்துகள் வாங்கியிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பூக்கடை பகுதிகளில் ஹவாலா பணப் பரிமாற்றத்தை தடுத்து அதனை பறிமுதல் செய்யும் போலீஸார் வருமான வரி துறையிடம் ஒப்படைக்கும் போது அங்கு பணியில் இருந்த சன்னி லாய்டுக்கும், வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் இருவரும் கூட்டு சேர்ந்து வழிப்பறியை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு உதவியாக திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறையில் எஸ் பி பிரபு, வருமானவரித்துறை அதிகாரி பிரதீப் ஆகியோர் கூட்டு சேர்த்துக் கொண்டதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் குருவிகளின் நடமாட்டம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகியவற்றை கண்காணித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், வழிப்பறி சம்பவங்களில் மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சன்னி லாய்டுவை டேராடூன் பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து போலீஸார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் 10-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
What's Your Reaction?