தமிழ்நாடு

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்வு!
Gold Rate
தமிழகத்தில் தங்கம் விலை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,600 உயர்ந்த நிலையில், இன்றும் அந்த வேகம் குறையாமல் மேலும் ஒரு அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது.

சவரன் ரூ. 1,14,000-க்கு விற்பனை

இன்று (ஜனவரி 21) காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,14,000 என்ற புதிய இமாலய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 340 உயர்ந்து ரூ. 14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு மொத்தம் ரூ. 6,400 உயர்ந்துள்ளது சாமானிய மக்களைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

உச்சத்திலேயே நீடிக்கும் வெள்ளி விலை

தங்கம் விலையில் கடும் ஏற்றம் நிலவினாலும், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 340-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 22,000 உயர்ந்த நிலையில், இன்றும் அதே உச்ச விலையிலேயே வெள்ளி நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் மத்தியில் நிலவும் கலக்கம்

தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால், நகைக்கடைகளுக்குச் செல்லவே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாகத் திருமண சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினர், இந்தத் திடீர் விலை உயர்வால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.