தமிழ்நாடு

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
4 years old girl sexually assaulted and murdered
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குழந்தையின் தாயுடன் தங்கியிருந்த கள்ள காதலனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியா (32). இவருடைய முதல் கணவர் ராஜா மறைந்த பிறகு, மணி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு சந்தோஷி (4) என்ற பெண் குழந்தை இருந்தது. கணவர் மணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த சத்தியா, கடந்த சில மாதங்களாக குலசேகரன்பட்டினம் அருகே உள்ள செட்டியாபத்து பகுதியில் தனது குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கள்ளக்காதலும் விபரீதமும்

சத்தியாவுக்கும் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜ் (20) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக இசக்கிராஜ் சத்தியாவின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார். கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலை, சத்தியா தனது 4 வயது மகளை இசக்கிராஜிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.

நாடகமாடிய காதலன்

சத்தியா கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இசக்கிராஜ் மற்றும் சத்தியா இருவரும் குழந்தையை உடன்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை ஏதோ வண்டு கடித்துவிட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி

குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சிறுமியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில், அந்தப் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இடுப்புப் பகுதியில் பலமாக அழுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

போக்சோ சட்டத்தில் கைது

குழந்தையின் தாய் சத்தியா அளித்த புகாரின் அடிப்படையில், குலசேகரன்பட்டினம் போலீஸார் இசக்கிராஜ் மீது போக்சோ மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.