தமிழ்நாடு

'ஜகா' வாங்கிய டிடிவி: எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு மீண்டும் NDA கூட்டணியில் அமமுக!

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைகிறது.

'ஜகா' வாங்கிய டிடிவி: எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு மீண்டும் NDA கூட்டணியில் அமமுக!
TTV Dhinakaran
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மிக வேகமான மாற்றங்களைக் கண்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை "துரோகி" என்றும், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்றும் முழங்கி வந்த டிடிவி தினகரன், இன்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார்.

30 நாளில் மாறிய நிலைப்பாடு

கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வந்தது. "எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் வரை அமமுக ஓயாது" என்று பேசி வந்த தினகரன், திடீரென இன்று காலை அடையாறில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாட்டின் நலன் கருதியும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வரவும் ஒரே அணியில் திரள்வது அவசியம்" என்று கூறி கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

டெல்லி பேச்சுவார்த்தையும் அமித் ஷாவின் 'டீல்'லும்

தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு வழியாகத் ரகசியமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகின. அந்தச் சந்திப்பின் போதே, அதிமுக - பாஜக - அமமுக ஆகிய கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதற்கான 'டீல்' பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்து, அதிமுக தான் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்பதை உறுதி செய்திருந்த நிலையில், தினகரன் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

"விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை"

"எடப்பாடியை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள்?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை" என்று தத்துவார்த்தமாகப் பதிலளித்தார் தினகரன். மேலும், இது ஒரு 'கூட்டணி தர்மம்' என்றும், தற்போதைய சூழலில் திமுக அரசை வீழ்த்துவதே தங்களின் முதல் இலக்கு என்றும் அவர் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலைச் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் சந்தித்தார்.