வெளிநாட்டில் வேலை என மோசடி செய்த கும்பல்.. தமிழக சிபிசிஐடி போலீசார் அதிரடி.. ஒருவர் கைது..!
சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

சைபர் கொத்தடிமை பணிக்கு வெளிநாட்டிற்கு இளைஞர்களை அனுப்பி வைத்து மோசடி செய்த கும்பலை கொல்கத்தா விமான நிலையத்தில் தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த அப்துல்காதர், ஆன்டனி மற்றும் ஷோபா ஆகியோர் ஐரோப்பிய நாடான செர்பியாவில் சமையல் உதவியாளர் பணிக்கு ஆட்களை தேடி கொண்டிருந்தனர். இது குறித்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சங்கர் சர்கார் என்பவரிடம் கூறி உள்ளனர்.
அவர் அந்த வேலைக்காக அப்துல்காதர் என்பவரிடம் ரூ.3 லட்சம் கொடுத்தார். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை லாவோஸ் நாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி 2022ம் ஆண்டு அனுப்பி வைத்தனர். அவர் 2022-2024 வரை சுமார் 2 வருட காலம் லாவோஸ் நாட்டில் உள்ள கோல்டன் டிரைஆங்கில் என்ற இடத்தில் செயல்பட்டுவரும் தனியன் குழுமம் மற்றும் ஜின்லாங் குழுமம் ஆகிய இரண்டு சீன நாட்டுக் கம்பெனிகளில் வேலை செய்து வந்தார்.
அப்போது 2024 ஆம் ஆண்டு எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஜேம்ஸ் கோல்டன் டிரைஆங்கிலில் உள்ள சீனக் கம்பெனிகளில் மோசடிக்கு வேலை செய்ய ஆட்களைக் கொண்டுவந்தால் அதற்காக கமிஷன் தொகை வழங்குவதாக உறுதி அளித்தார்.
சங்கர் சர்கார் அப்துல் காதரிடம் லாவோஸ் நாட்டில் தரவு உள்ளீடு வேலைக்கு நிறைய ஆட்கள் தேவைப்படுவதாகக் கூற அப்துல் காதர் தனக்குத் தெரிந்த நண்பரான திருச்சியைச் சேர்ந்த ஏஜெண்டு சையது என்பவரிடம் 9 ஆட்களைப் பெற்று லாவோஸுக்கு அனுப்பி வைத்தார். அங்கு சங்கர் சர்கார், 5 பேரிடம் மட்டும் குடிவரவு அனுமதிக்காக எனக் கூறி அவர்களிடமிருந்து மொத்தம் 1000 டாலர் வசூல் செய்துள்ளார்.
பின்பு அவர்களை ஜேம்ஸிடம் ஒப்படைத்து அதற்காக ஜேம்ஸிடமிருந்து 2000 சீன பண நோட்டுகளை கமிஷன் தொகையாக பெற்றுக் கொண்டார். பிறகு ஜேம்ஸ் அவர்களைக் கட்டாயப்படுத்தி அங்குள்ள சைபர் மோசடி கம்பெனிகளில் வேலைக்கு அனுப்பியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த அருண் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சையது அப்துல் காதர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தலைமறைவான சங்கர் சர்காரை தேடிவந்த நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 3 ஆம் தேதி லாவோஸ் செல்ல முயன்ற சங்கர் சர்கார் என்பவரை கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடுத்து நிறுத்திய குடியுரிமை அதிகாரிகள் பிடித்தனர்.
இது குறித்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் கொல்கத்தா சென்று சங்கர் சர்க்காரை கைது செய்தனர். பிறகு அவரை பாரக்பூர் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, கைது மாற்று ஆணை மூலம் அவரை நேற்று 06.12.2024ம் தேதி சேலம் கொண்டு வரப்பட்டார்.
சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 அவர்களின் முன் ஆஜர்படுத்தி, அவரது உத்தரவு பெற்று சங்கர் சர்க்காரை நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.
What's Your Reaction?






