மக்கள் விரோத அரசு.. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அட்ரஸ் இல்லாத கட்சி தான் திமுக- தமிழிசை ஆதங்கம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார் என்றும் கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கி செடிகளை பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, உண்மையிலேயே இன்றைக்கு மகிழ்ச்சியான நாள். சென்ற முறை தெலுங்கானாவில் தேசிய கொடியை ஏற்றிவிட்டு புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தேசியக் கொடியை ஏற்றினேன். இந்தியாவிலேயே இரண்டு மாநிலத்தில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பினை பிரதமர் எனக்கு வழங்கினார். அப்பொழுது எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தேனோ அதே மகிழ்ச்சியோடு கொடியை ஏற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாட்டுப்பற்று அதிகம் உள்ளவர்கள் நாட்டிற்காக உழைக்கக் கூடியவர்கள் பாஜகவினர் தான். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் பிரதிநிதியாக நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். ஒரே நாடு ஒரே தேர்தலை பொறுத்தவரை தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிக்கையை பார்த்தால் எந்த அளவிற்கு பலன் தரும் மக்களுக்கு பலத்தை தரும் என தெரியவரும்.
பிரதமர் நரேந்திர மோடி எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அது மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய திட்டமாகத்தான் இருக்கும். மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலை வேண்டாம் என மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக் குழுவினர் சென்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்கள். பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டு மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
திமுக ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு டங்ஸ்டன் ஆக இருக்கட்டும், அன்றைக்கு ஹைட்ரோ கார்பனாக இருக்கட்டும் இந்த விவகாரங்களில் டெண்டர் விடும் வரை அமைதியாக இருந்துவிட்டு அதன்பின் மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கிறோம் என நாடகம் ஆடுகிறார்கள். மாநில அரசு முன்பே கூறியிருந்தால் மத்திய அரசு இதனை நிச்சயமாக முன்னெடுத்து இருக்கமாட்டார்கள். செய்கின்ற தவறை எல்லாம் மாநில அரசு செய்துவிட்டு பின்பு நாடகம் ஆடுகிறார்கள்
டங்ஸ்டன் வந்தால் முதலமைச்சராக இருக்க மாட்டேன் என கூறிய ஸ்டாலின் 2026-ல் நிச்சயமாக முதலமைச்சராக இருக்கப் போவதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறார். வேங்கை வயல் பிரச்சனையில் கூட்டணி கட்சிகள் கொந்தளிக்கும் அளவிற்கு அரசின் நடவடிக்கை இருக்கிறது. சமூக நீதி தமிழகத்தில் மறுக்கப்படுகிறது என்பதற்கு வேங்கைவயல் ஒரு உதாரணம்.
முதலமைச்சர், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரிட்டாப்பட்டி செல்கிறார். இரும்பிற்கு காரண கர்த்தா நாம்தான் என இரும்பு மனம் படைத்த நமக்கெல்லாம் பெருமையாக தான் இருக்கிறது. ஆனால், இரண்டு வருடங்களாக அதை வெளியிடாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள். திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதற்கு ஏதாவது கட்டுப்பாடு விதித்தீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்காத ஒரு மொழி தனியார் பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கிறது என்பதைத்தான் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதற்கு முன்பு எத்தனை நாட்கள் முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுவர் குறித்தும் வள்ளலார் குறித்தும் பேசி இருக்கிறார். திருவள்ளுவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் சமமானவை தான். அந்த காலத்தில் ஒரு ஞானியைப் போல திருவள்ளுவர் தோற்றமளித்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளது.
தமிழும் இவர்களுக்கு தான் சொந்தம், தமிழ் அறிஞர்களும் இவர்களுக்கு தான் சொந்தம் ஏதோ எங்களுக்கெல்லாம் இல்லாதது போல இவர்கள் பேசுவதை நான் மறுக்கிறேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை தமிழிசைக்கும் இருக்கிறது. ஏறத்தாழ 75 ஆண்டுகளாக அதைக் கொண்டு வந்து விட்டீர்கள். இதற்கு முடிவு காலம் வந்துவிட்டது. அதனை பாஜக முன்னெடுக்க உள்ளது. தமிழுக்கு நாங்களும் சொந்தக்காரர்கள் தான்.
நாங்கள் பேசுகின்ற அளவிற்கு ஏன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேசுகின்ற அளவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவாரா என்பது கேள்விக்குறி தான். ஆளுநர், மாநில அரசு குறித்து குடியரசு தினத்தன்று அறிக்கை வெளியிடுவது இயல்புதான். அந்த மாநிலத்தில் என்னென்ன நடக்கிறது, எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து வெளியிடுவது வழக்கமான ஒன்று.
கும்மிடிப்பூண்டியை தாண்டினால் திமுகவிற்கு அட்ரஸ் கிடையாது. உதயநிதி ஸ்டாலினுக்கு கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் என்பதை தாண்டி என்ன தகுதி இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர் பதவியில் இருக்கும் ஆளுநர் குறித்து பேசுவதற்கு உதயநிதிக்கு எந்த தகுதியும் கிடையாது என்று கூறினார்.
What's Your Reaction?