ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி.. கார் பார்க்கிங்காக மாறிய மேம்பாலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது. இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு -தென்கிழக்கு திசையில் சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு- வட கிழக்கு திசையில் 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30-ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாட்டில்சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக பொதுமக்கள் தங்கள் கார்களை ராயபுரம் மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து தற்போது ராயபுரம் மேம்பாலத்திலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை மழை பெய்த போது ஏராளமான கார்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. இதனால், சென்னை மக்கள் முன்னெச்சரிக்கையாக கார்களை பாதுகாப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?