போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்

வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார்.

Sep 29, 2024 - 12:52
Sep 29, 2024 - 13:09
 0
போட்டிக்கு தயாரான தமிழக வீரர்.. 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம்
3 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் இடம்பிடித்த வருண் சக்கரவர்த்தி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. கான்பூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி, 27ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல்நாள் மட்டுமே விளையாடப்பட்டது. மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் 3 போட்டிகள் டி20 தொடரில் வங்கதேச அணி விளையாட உள்ளது. முதல் போட்டி அக்டோபர் 6ஆம் தேதியும், 2வது போட்டி அக்டோபர் 9ஆம் தேதியும், 3ஆவது டி20 போட்டி அக்டோபர் 12ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சூர்யகுமார் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியில், ஹர்திக் பாண்டியா விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு மாதங்களுக்கும் மேலாக, எந்த ஒரு போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடாத மயங்க் யாதவுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தற்போதைய தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மணன் உடற்தகுதி அனுமதி வழங்கியுள்ளார்.

மயங்க் 2024 ஐபிஎல் போட்டியில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியதோடு, வெறும் 12.1 ஓவர்கள் மட்டுமே வீசினார். ஆனால் அந்த தொடரில், தொடர்ந்து 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி, எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் டி20 போட்டியில் மட்டும் விளையாடுவதற்கு லக்‌ஷ்மணன் அனுமதி அளித்துள்ளார்.

அதே சமயம் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில், வருண் சக்கரவர்த்திக்கு இடமளிக்க தேர்வாளர்கள் மறுத்துவிட்டனர். கடைசியாக அவர், ஐக்கிய அரபு எமீரகத்தில் நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றிருந்தார்.

அதே சமயம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில், வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டு இருந்தார். 15 போட்டிகளில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்தார். மேலும், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீர் தலைமையில் தான் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில், 46 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார். சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்க உள்ளார். மேலும், சஞ்சு சாம்சனுக்கு மாற்று விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா அணிக்கு தேர்வாகியுள்ளார்.

வீரர்கள் பட்டியல்: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் ஷர்மா, (வி.கீ.), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow