இனி தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள்.. 2 மில்லியன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..
கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக கடந்த 27ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டார். மேலும், அங்குள்ள முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், கூகுள் நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
ஆப்பிள் நிறுவனம்:
ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், பெர்சனல் கம்ப்யூட்டர்கள், கையடக்க கணினி (TAB) மற்றும் ஸ்மார்ட் கை கடிகாரங்கள், Headphones, Airpod போன்ற அணியக்கூடிய மின்னணு பொருட்கள் மற்றும் பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தயாரித்து சந்தைப்படுத்துவது மற்றும் பல்வேறு தொடர்புடைய சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அப்போது, உலக மின்னணு சாதனங்கள் உற்பத்தி வரைபடத்தில் தமிழகத்திற்கான இடத்தை உறுதி செய்ததற்காக ஆப்பிள் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஆசியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க இருப்பதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனம் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
கூகுள் நிறுவனம்:
கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்தபோது, தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ஸ்டார்ட்-அப்கள், தொழில்துறை சுற்றுச்சூழல் இயக்கம் மற்றும் எதிர்காலத்திற்கான திறன் ஆகியவற்றில் AI கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சியை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.
இந்தியாவின் மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியான ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர்காலத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
மேலும், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
What's Your Reaction?






