மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் ஆர்.வைத்தியலிங்கம். தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் இவர், தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் மீது அறப்போர் இயக்கம் லஞ்சப் புகார் தெரிவித்தது.
இதையடுத்து வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தற்போது, அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை திடீர் சோதனையை நடத்தி வருகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறைகள் மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் என்டிஆர் தெருவில் வசித்து கோட்டீஸ்வரி என்பவரது வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தலைமை பைனான்ஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை மையமாக வைத்து அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற நடந்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்கள்:
1. சென்னை கோடம்பாக்கம் என்டிஆர் தெருவில் வசித்து கோட்டீஸ்வரி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தலைமை பைனான்ஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
2. சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள ஒரத்தநாடு தொகுதி அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கான அறை எண் டி பிளாக்கில் 4வது மாடியில் உள்ள அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.
4. சென்னை தி.நகர் பர்கிட் சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீராம் கேப்பிட்டல் கார்ப்ரேட் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.
5. சென்னையை அடுத்த திருவேற்காடு கார்ப்ரேட் நகர் அன்னம்மா தெருவில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் கட்டுமான நிறுவனத்தின் மேலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
6. சென்னை ஆழ்வார்பேட்டை சிபி ராமசாமி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீராம் சிட்ஸ் மற்றும் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
7. சென்னை அசோக் நகர் 10 வது அவென்யூ பகுதியில் ஆடிட்டர் ஒருவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.