சைபர் கிரைம் மூலம் ரூ.1,500 கோடி இழந்த பொதுமக்கள்.. டிஜிபி அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 1500 கோடி ரூபாய் சைபர் கிரைம் மோசடி நடந்து உள்ளதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே தனியார் பள்ளி மற்றும் தனியார் அமைப்பு இணைந்து நடத்திய சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திர பாபு, ‘கல்லூரி மாணவர்களை போதை மருந்து கடத்தலில் கைது செய்ததாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு போன் செய்து மிரட்டி ஜிபே மூலம் மோசடி நடைபெறுகிறது.
அதேபோல, ஆதார் கார்டை இணைக்காததால் மின் இணைப்பை துண்டிக்கபோவதாகவும், வங்கிக் கணக்கை முடக்கி, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்வதாகவும், சூதாட்டம் மூலம் ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை கிடைப்பதாக கூறி ஆன்லைன் ரம்மி மூலம் மோசடிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
காவலர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி முப்பது லட்சம் சூதாட்டத்தால் இழந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்ட சைலேந்திர பாபு. வங்கி கணக்கை யாருக்கும் கொடுக்க கூடாது என்றும் திருமண தகவல் மையம், [Matrimony] மூலம் மோசடிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது மாணவ மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய சைலேந்திர பாபு, “இன்றைக்கு தமிழ்நாட்டில் நடக்கூடிய குற்றச் சம்பவங்களில் சைபர் கிரைம் அதிகளவில் நடைபெறுகிறது.
சைபர் குற்றவாளிகள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.. லாவோஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து சைபர் கிரைம் குற்றவாளிகள் ஏமாற்றி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தும் நேரத்தை குறைத்தாலே, சைபர் குற்றங்கள் 80 சதவீதம் குறைந்துவிடும்.
விழிப்புணர்வோடு இருந்து ஏமாறாமல் இருப்போம். கடந்த ஒன்பது மாதத்தில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு சைபர் கிரைம் மோசடி மூலம் மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். சைபர் மோசடிகள் நடைபெற்றால், பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
What's Your Reaction?