Rajinikanth: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் நன்றி... விஜய் பேரு மட்டும் மிஸ்ஸிங்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்த பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயிறு வலியுடன் ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு, அறுவை சிகிச்சை எதுவும் இல்லாமல் ஸ்டென்ட் (Stent) மட்டும் பொருத்தப்பட்டுள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது. அதன் பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்றிரவு வீடு திரும்பினார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என் ரவி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும், ரஜினி விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்திப்பதாக ட்வீட் செய்திருந்தனர். அதேபோல் ரஜினியின் ரசிகர்களும் கோயில்கள் உட்பட வழிபாட்டுத்தலங்களில் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் அனைவருக்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார்.
பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “என் மீது அக்கறை கொண்டு, எனது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்த உங்களுக்கு மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார். அதேபோல், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அதில், “நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பாலிவுட் நடிகரும் தனது நண்பருமான அமிதாப் பச்சன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் தனித்தனியாக தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இதுதவிர அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம்பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையைச் சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தான் விரைவில் நலம்பெற வேண்டி ட்வீட் செய்திருந்த தவெக தலைவர் விஜய்க்கு, ரஜினிகாந்த் நன்றி கூறவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அவர் பெயரை மட்டும் ரஜினிகாந்த் எப்படி மறந்தார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
What's Your Reaction?