6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Oct 4, 2024 - 22:54
Oct 4, 2024 - 22:56
 0
6 இடங்களில் ரூ.1.6 கோடி கொள்ளை; நாமக்கலில் சிக்கிய கும்பலுக்கு தொடர்பு - விசாரணையில் அம்பலம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் பகுதியில் 2 கார்கள், 4 பைக்குகள் மீது மோதிவிட்டு கண்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. போலீஸார் தடுத்து நிறுத்தியும் நிறுத்தாமல் சென்றதாலும், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மோதும் வகையில் சென்றதாலும், காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கண்டெய்னர் லாரியை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினர். கண்டெய்னரை திறக்க முற்பட்டபோது, காவல் ஆய்வாளரை கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதால், போலீஸார் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுக் கொன்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு கொள்ளையனின் காலில் சுட்டு, போலீஸார் பிடித்தனர். மேலும், கண்டெய்னர் லாரிக்குள் பதுங்கியிருந்த 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

கேரளா திருச்சூரில் அதிகாலை இரண்டரை மணி முதல் 4 மணிக்குள்ளாக மூன்று எஸ்பிஐ ஏடிஎம்களை குறி வைத்து கொள்ளையடித்துள்ளனர். திருச்சூரில் மப்ரனம் என்ற இடத்தில் உள்ள ஏ.டி.எம். இல் இருந்து 35 லட்ச ரூபாய் பணமும், சோரனூர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் ஒன்பதரை லட்சம் பணமும் கொலஷி என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்மில் 25 லட்ச ரூபாய் பணம் என 70 லட்ச ரூபாய் அளவிற்கு ஏடிஎம்மில் கொள்ளையடித்து இருக்கின்றனர்.

நான்கு பேர் கொண்ட முகமூடி அணிந்து கொண்டு கேரளாவில் இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய உடன், கண்டைனர் லாரியில் தாங்கள் வந்த சொகுசு காரையும் ஏற்றுக் கொண்டு கொள்ளையடித்த பணத்தோடு தப்பித்துள்ளனர். நாடு முழுவதும் கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் ஏடிஎம்களை கொள்ளை அடிக்கும் ஹரியானா மேவாட் கொள்ளையர்கள் (Haryana Mewat Robbers Gang) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல்லில் சிக்கிய கண்டெய்னர் லாரியையே விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கும் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் அருகே இருக்கும் ஏடிஎம்களை குறி வைத்து வெல்டிங் மிஷினால் ஏடிஎம்களில் பணத்தை கொள்ளையடிப்பதையே இந்த கொள்ளையர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக போலீசாரின் விசாரணையின் கிடைத்த தகவலின் மூலமாக விசாகப்பட்டினம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.  கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் விசாகப்பட்டினத்தில் 6 எஸ்.பி.ஐ. ஏடிஎம் மையங்களில் 1.6 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.

அதே கண்டெய்னரில் வேறு காரை பயன்படுத்தி கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட கும்பல் தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விசாகப்பட்டினம் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கேரளா போலீசார் அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்துள்ள நிலையில், விசாகப்பட்டின போலீசாரும் விசாரணை நடத்த உள்ளனர். கொள்ளையடித்த போது கைப்பற்றிய சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வேறு சிலரையும் அடையாளும் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடப்பா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெப்பரை போன்ற ஊர்களில் இருந்து அதே ஏடிஎம்களில் கொள்ளையடித்தது குறித்து  விசாரிப்பதற்காக விசாகப்பட்டினம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர், சூரிய பிரகாஷ் தலைமையிலான போலீசார் நாமக்கல் வெப்படை காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

மேவாட் கொள்ளையர்கள் கொள்ளையடித்த ஏடிஎம் அனைத்திலும் இரவு காவலர்கள் இல்லை. இரவு 3 மணியிலிருந்து 5 மணிக்குள்ளாகவே கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாநிலம் விட்டு மாநிலமாக ஏடிஎம் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில் தமிழக போலீசார் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்தது பல்வேறு மாநில போலீசாரிடையே பாராட்டுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow