சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக  விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 25, 2024 - 08:42
 0
சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
சவுக்கு சங்கர்

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் ஒரு வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது தொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி விசாரிப்பதற்காக சம்மன் அனுப்பினார். கடந்த 16-ஆம் தேதி சவுக்கு சங்கர் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

விசாரணையின் போது காவல்துறையைப் பற்றி அவதூறாகவும், மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும் தனது சவுக்கு மீடியா சேனலில் காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக நில அபகரிப்பு பிரிவு விசாரணை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார். 

அந்த அடிப்படையில் காவல்துறை மற்றும் அரசுக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்பட்ட சவுக்கு சங்கர், அவரது youtube சேனலான சவுக்கு மீடியா மற்றும் தொகுப்பாளர்கள் மாலதி, லியோ ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற ஜனவரி 7-ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட்டார். பின்னர், சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்து சென்றனர். 

முன்னதாக, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது கார் மற்றும் அவரது உதவியாளர் உள்ளிட்டோரிடம் இருந்து தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கடந்த ஜூலை மாதம் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, விசாரணையின் போது சவுக்கு சங்கர் தொடர்ச்சியாக ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து சென்னை தி.நகர் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் அலுவலகத்தில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow