Rahul Gandhi: ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு பாடம்… மக்களவையில் ராகுல் காந்தி அதிரடி!
ராமர் கோயில் கட்டிய அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு புயலை கிளப்பியுள்ளது. மக்களவையில் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். ஆரம்பம் முதலே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, அயோத்தியில் பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாக கூறினார். முன்னதாக எதிர்க்கட்சியாக இருப்பதை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன், என்னைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது, எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை என அதிரடி காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் சாசனம் கடந்த 10 ஆண்டுகளாக கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதாகவும், இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் பேசினார். மேலும், சிவனின் அபய முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னம், அரசியல் சாசனத்தின் மீதான தொடர் தாக்குதலை காங்கிரஸ் கட்சி காத்து வருவதாகவும் சிவனின் படத்தை காண்பித்து பேசினார் ராகுல் காந்தி. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் படுகொலை செய்யப்பட்டனர்; இந்த அவையில் மட்டும்மல்ல ஒட்டுமொத்த தேசத்திடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார்.
அதேபோல், ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ அல்ல, உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை எனக் கூறினார் ராகுல் காந்தி. அதற்கு பதில் கூறிய பிரதமர் மோடி, இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மேலும், ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டதாக மீண்டும் தனது தாக்குதலை தொடங்கினார். அப்போது ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது என் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மக்களவை தேர்தலில் அயோத்தி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அவதேஷ் பிரசாந்த் வெற்றி பெற்றிருந்தார். மக்களவையில் அவருக்கு ராகுல் காந்தி கை குலுக்கி பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அக்னிவீர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல, அது மோடிக்கான திட்டம்; இந்தத் திட்டத்தை உருவாக்கியதும் அவர் தான் என குற்றம்சாட்டினார். பண மதிப்பிழப்பை எப்படி கொண்டு வந்தாரோ அதேபோல தன்னிச்சையாக கொண்டு வந்த திட்டம் தான் அக்னிவீர்; அந்தத் திட்டம் பிரதமர் மோடியின் மூளையில் உதித்த குழந்தை என கடுமையாக விமர்சித்தார். அதேபோல், அக்னிவீர் திட்டத்தில் உயிரிழக்கும் வீரர்களின் வாரிசுகளுக்கு பென்சன் வழங்கப்படுவதில்லை, ஆனால், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மட்டும் வழங்கப்படுவதாக கூறினார். மேலும்,. பிரதமர் ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை, மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி தானே என கேள்வி எழுப்பினார். மேலும் மணிப்பூரில் உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் பொறுத்தவரையும் மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை என்றும் ஆதங்கமாக பேசினார். அதுமட்டுமில்லாமல் அவைக்கு நான் வரும் போது பிரதமர் மோடி என்னை பார்த்து சிரிப்பது கூட இல்லை எனக் கூறினார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க் கட்சித் தலைவரை நான் சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என ஜனநாயகமும், அரசியல் சாசனமும் எனக்கு கற்பித்துள்ளதாக தெரிவித்தார்.
What's Your Reaction?






