மக்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்... எடப்பாடி பழனிசாமி!
பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனி மூட்டப்பாதை உள்ளிட்ட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஒவ்வொரு பொழுதுபோக்கு அம்சத்திற்கு பெரியவர்கள், சிறியவர்கள் எனத் தனித்தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பூங்காவின் ஜிப் லைனில் நேற்று திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. அந்தரத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஜிப் லைன் திடீரென பழுதாகி நின்றதால் அதில் பயணித்த இரண்டு பெண்கள் பதற்றமடைந்து அலறினர். இதையடுத்து இருவரும் கயிறு மூலம் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு.
பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?