O Panneerselvam on Alcohol Prohibition : இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில், எந்த ஆட்சியால் மது கொண்டு வரப்பட்டதோ, மது ஆலை அதிபர்கள் எந்தக் கட்சியில் அதிகமாக உள்ளனரோ அவர்களை வைத்து மது ஒழிப்பு மாநாடு நடத்துவது மிகுந்த வருத்தமளிக்கும் செயல் ஆகும். இந்த மாநாட்டில் மதுவை ஒழிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துவது மக்களை ஏமாற்றும் செயல்.
இந்திய அரசமைப்புச் சட்டம், அட்டவணை VII, பட்டியல் II-ன்படி மது என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. மாநிலத்திற்கு உள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்திதான் தமிழ்நாட்டில் மதுவைக் கொண்டு வந்தது திமுக ஆட்சி. எந்த அதிகாரத்தை பயன்படுத்தி மதுவைக் கொண்டு வந்ததோ, அதே அதிகாரத்தை பயன்படுத்தி மது விலக்கை அமல்படுத்துவதுதானே முறை. மாநில சுயாட்சி, மாநில உரிமை என்று அடிக்கடி குரல் கொடுக்கும் திமுக, கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டுமென்று குரல் கொடுக்கும் திமுக மாநிலப் பட்டியலில் உள்ள மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது புரியாத புதிராக இருக்கிறது. மாநில உரிமையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த தயங்குவது ஏன் என்பதுதான் கேள்வி. டாஸ்மாக் மூலம் வருகின்ற வருமானம் தமிழ்நாடு அரசுக்கு செல்கின்ற நிலையில், இதற்கு ஏன் மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை. இந்தியாவில் குஜராத், பீஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மது விலக்கு நடைமுறையில் இருக்கிறது. அதேபோன்ற நடவடிக்கையை எடுக்க திமுக அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. திமுக அரசின் இந்த நடவடிக்கை கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது போல் உள்ளது. ஒரு வேளை மது ஆலை அதிபர்கள் எல்லாம் திமுகவில் இருக்கிறார்கள் என்பதால் மதுவிலக்கை எடுத்துவர திமுக தயங்குகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் மாநில அரசால் மதுவை ஒழிக்க(Alcohol Prohibition) முடியாது என்று மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் பேட்டியளித்து இருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இது உண்மை என்றால், 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுகவால் ஏன் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது? மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேடைக்கு மேடை முழங்கினாரே! அதற்கு என்ன பொருள்? மதுவினால் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் மேடையில் சென்னாரே! அதற்கு என்ன அர்த்தம்? ஒருவேளை மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது போலும்! இல்லை, மாநிலத்தின் உரிமையை தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடல் போலும்!
மேலும் படிக்க: App மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....
திமுகவிற்கு மது விலக்கை(Alcohol Prohibition) கொண்டு வர மனமில்லை, வருமானத்தையும் இழக்க விரும்பவில்லை. மது விலக்கு குறித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சிகளும் கூறுவது போகாத ஊருக்கு வழி தேடும் செயலாகும். திமுகவின் பிறர்மீது பழிபோடும் போக்குக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் உடனடியாக அமல்படுத்த வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.