Hi Box App Scam : ஆப் மூலம் ரூ. 500 கோடி சுருட்டல்.... சென்னையில் சிக்கிய முக்கிய குற்றவாளி....
Hi Box App Scammer Arrest in Chennai : நாடு முழுவதும் 500 கோடி மோசடி செய்த hibox செயலி நிறுவனத்தின் முக்கிய இயக்குனர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
Hi Box App Scammer Arrest in Chennai : வித்தியாசமான செயலிகளை உருவாக்கி அதில் முதலீடுகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு அதிக லாபம் தருவதாக கூறி மோசடி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஹை பாக்ஸ் (hi box) செயலி மோசடி என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தினமும் 1 - 5% வரையும் மாதம் 30 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரையும் அதிக வட்டி தருவதாக கூறி பல்வேறு திட்டத்தின் மூலம் செயலியில் முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக புகார்கள் குவிந்தன. குறிப்பாக இந்த ஹை பாக்ஸ் செயலி மூலம் நூதன முறையில் மக்களை ஈர்க்க பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளனர்.
இந்த செயலியில் குறைந்தபட்சம் 300 ரூபாய் தொடங்கி ஆயிரக்கணக்கில் பல்வேறு விதமான வழியில் மிஸ்டரி பாக்ஸ் என்ற திட்டத்தில் பணத்தை செலுத்தினால் வீட்டிற்கு வரும் அந்த மிஸ்டரி பாக்ஸில் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல பரிசு பொருட்கள் கிடைக்கும் என்று கூறி பணத்தை செயலியில் முதலீடு செய்ய வைக்கின்றனர். அதன் பின் அந்த பாக்ஸில் வரும் பொருட்கள் பிடிக்கவில்லை என்றால் அதே செயலியில் பொருட்களை விற்று பணமாக மாற்றிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். தேவைப்பட்டால் தாங்கள் சொந்த பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என பல்வேறு விதமான திட்டங்களை அறிவித்து பணத்தை ஈர்த்துள்ளனர்.
குறிப்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரமாக மக்களின் முதலீடுகளை பெற இந்த செயலி நிறுவனம் ஆரம்பித்தது. youtube மூலம் அவர்கள் பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரை பயன்படுத்தி விளம்பரம் செய்ததன் மூலம் ஆயிரக்கணக்கான பேர் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் பரியா சக்கரபோர்த்தி, youtube எல்விஷ் யாதவ், காமெடி நடிகை பாரதிசீன் மற்றும் சமூக வலைதள இன்புளுயன்ஸர்கள் பலர் விளம்பரம் செய்து மக்கள் ஏமாற காரணமாக இருந்ததால் அவர்களை விசாரணைக்கு ஆஜராக டெல்லி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக டெல்லி சைபர் கிரைமில் உள்ள IFSO எனப்படும் சிறப்பு பிரிவு மூலமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. 127 புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேசிய சைபர் க்ரைம் போர்டல் வழியாகவும் இதே போன்ற 500 புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்பஸ் (easebuzz) மற்றும் போன் பே ஆகிய பணப்பரிவர்த்தனை நிறுவனங்களில், ஹை பாக்ஸ் செயலி நடத்தி வந்த மோசடி நபர்களின் கணக்கை டெல்லி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 20 நிறுவனங்கள் இந்த செயலிக்கு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த தொடர் விசாரணையில் சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சிவராம் ஜெயராமன் என்பவர் ஹை பாக்ஸ் செயலியின் இந்திய இயக்குனர்களில் ஒருவராக செயல்பட்டு இந்த மோசடியை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் சுற்றுலா எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி இயக்குனராக இருந்து வந்துள்ளார். அதில் பணி புரியும் 50 ஊழியர்கள் பெயரில் வங்கிக் கணக்குகள் துவங்கி இந்த செயலி மூலமாக மோசடி செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாயை பரிவர்த்தனை செய்ததும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சிவராம் ஜெயராமன் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு செய்ததில் 18 கோடி பணத்தை டெல்லி சைபர் கிரைம் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தின் இயக்குனராகவும் சிவராம் ஜெயராமன் செயல்பட்டு வந்துள்ளார். தெற்காசிய பகுதியில் சிவராம் ஜெயராமனை இயக்குனராக அமர்த்தி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இந்த செயலியில் முதலீடு செய்ய வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்... உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக மீனவர் சங்கம்!
தொடர்ந்து ஐ பாக்ஸ் செயலியின் இயக்குனராக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்ட சிவராமை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இந்த மோசடியில் யார்- யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மோசடிக்கு மணி மியுல்கள் போல் செயல்பட்டுள்ளார்களா என நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு அது தொடர்பாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப் பிரதேசம் நொய்டாவில் உள்ள அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவான மற்ற முக்கிய இயக்குனர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?