அரசியல்

குரூப்-4 தேர்வு.. காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

2024-ஆம் ஆண்டு நடந்து முடிந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வு.. காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!
குரூப்-4 தேர்வு.. காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி-1, தொகுதி-2, தொகுதி-2A, தொகுதி-3, தொகுதி-4 என பல நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், தொகுதி-4-ன்கீழ் (Group IV) உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பல்வேறு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளதன் காரணமாக அமைச்சகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே நிலைமை நீதிமன்றங்களிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றங்களில், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர் பணியிடங்கள் காலியாக உள்ளதன் காரணமாக தீர்ப்பளிக்கும் உறுப்பினர்களே தட்டச்சு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் பத்திரிகையில் செய்தி வெளி வந்தது.

பொதுவாக, தொகுதி-4-ன்கீழ் வரும் உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்துத் தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி, முடிவுகளை வெளியிடும். இதன்மூலம் ஏழையெளிய கிராமப்புற இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பினை பெறுவார்கள். இந்த அடிப்படையில், 2018 ஆம் ஆண்டு தேர்வின் மூலம் கிட்டத்தட்ட 12,000 பணியிடங்களும், 2019 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9,700 பணியிடங்களும் நிரப்பப்பட்டன. கோவிட் பெருந்தொற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றபின், முதன் முறையாக 2022 ஆம் ஆண்டு தொகுதி-4-ன்கீழ் வரும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. இதன்மூலம், சீருடைப் பணியாளர்கள் (வனத் துறை) இல்லாமல் 10,139 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2023 ஆம் ஆண்டு தொகுதி-4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை. 2024 ஆம் ஆண்டு, தொகுதி-4-ன்கீழ் வரும் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் தொகுதி-4-ன்கீழ் கிட்டத்தட்ட 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2024 ஆம் ஆண்டு முதலில் வெறும் 6,244 பணியிடங்களுக்கான அறிவிப்பை மட்டுமே வெளியிட்டது. இதில், சீருடைப் பணியில் வரும் (வனத் துறை) எண்ணிக்கையை கழித்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை என்பது வெறும் 5,067. பின்னர், கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது மேலும் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கை 8,932 என குறிப்பிடப்பட்டாலும், அமைச்சுப் பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 7,755 மட்டுமே. இது முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது வெகுக் குறைவு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இலட்சக்கணக்கான அமைச்சுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பது மிக மிகக் குறைவு. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையிலும், 2023 ஆம் ஆண்டு போட்டித் தேர்வினை நடத்தாததையும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டால், 8,932 என்ற எண்ணிக்கை யானைப் பசிக்கு சோளப் பொறி போடுவதைப் போல் அமைந்துள்ளது. இதில், அமைச்சுப் பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 7,755 தான்.

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை வெகு குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, cut-off மதிப்பெண் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் ஏழையெளிய கிராமப்புற இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிடும் என்றும், 2024-ஆம் ஆண்டு தொகுதி-4 போட்டித் தேர்வினை எழுதியோர் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, பல தகுதியான இளைஞர்கள் தேர்ச்சி பெறமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தொகுதி-4 போட்டித் தேர்வினை எழுதியவர்களுக்கு, வனத் துறைப் பணியிடங்கள், அதாவது சீருடைப் பணியிடங்களையும் சேர்த்து 8,932 காலிப் பணியிடங்கள் என்பது பேரதிர்ச்சியை அளித்துள்ளது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை உயர்த்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தொகுதி-4 போட்டித் தேர்வு எழுதியவர்களிடையே மேலோங்கி நிற்கிறது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமைச்சுப் பணியாளர்கள்தான் அரசாங்கத்தின் ஆணிவேர் என்ற நிலையில், பெரும்பாலான பணியிடங்கள் காலியாக உள்ள காரணத்தால், மக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் உரிய காலத்தில் சென்றடையவில்லை என்றும், தற்போது பணிபுரியும் அலுவலர்கள் கூடுதல் பணிச் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றும், சில அலுவலகங்களில் அனைத்து பணிகளையும் அதிகாரிகளே செய்யக்கூடிய அவல நிலை நிலவுவதாகவும் தகவல்கள் வருகின்றன.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 34 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. தி.மு.க.வின் வாக்குறுதியில் பத்து விழுக்காடு கூட நிறைவேற்றப்படாதது மிகவும் வேதனையளிக்கிறது.

2024 ஆம் ஆண்டு தொகுதி-4 (Group IV) போட்டித் தேர்வினை எழுதிவிட்டு முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கும் எதிர்கால இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை ஓரளவுக்கு நிறைவேற்றும் வண்ணமும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில் உள்ளதைக் கருத்தில் கொண்டும், தொகுதி-4-ன்கீழ் வரும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 வரை அதிகரிக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, அரசுத் துறைகளில் சமூக நீதியை நிலை நாட்ட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.