கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்.. தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கும் போது நிபந்தனையாக விதிக்கப்பட்ட ஆய்வினை விரைந்து மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sep 10, 2024 - 10:56
Sep 10, 2024 - 17:33
 0
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்.. தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு
pen memorial for karunanidhi in marina

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டது. இது போன்ற நிபந்தனை விதித்தால் அது எந்த அளவிற்கு வெளிப்படை தன்மையுடன் நியாயமாக நடைபெறும் என மத்திய அரசிற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டி வங்கக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை கொடுத்த அனுமதியை எதிர்த்து, ராம் குமார் ஆதித்யன், பாரதி மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வெண்ணிலா தயுமானவன் ஆகியோர் தென்மண்டல  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் அமர்வினால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமர்வு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,இந்த திட்டத்திற்கான அனுமதி அளித்த போது கொடுக்கப்பட்ட நிபந்தனைகளில் கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது போல் ஒரு திட்டத்தை செயல்படுத்துபவரிடமே அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சொன்னால் வெளிப்படை தன்மையுடன் நியாயமான ஆய்வு நடைபெறுமா என்றும் ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால் அதற்குள் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டிருக்குமே அப்போது என்ன செய்வீர்கள் என்றும் மத்திய அரசிற்கு கேள்வி எழுப்பினர்.

இனி ஒரு திட்டத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதனை மத்திய சுற்றுச்சூழல் துறையே மேற்கொண்டு அதற்கான செலவினை  திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கும் போது நிபந்தனையாக வழங்கப்பட்ட ஆய்வினை விரைந்து மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் மாதம் 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow