இப்பவே நாடாளுமன்றத் தேர்தல்... அசுர பலத்தில் திமுக, பாஜக! X ஃபேக்டராக உருவெடுக்கும் தவெக?

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், மத்தியிலும், மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிகள் அதிக இடங்களில் வெற்றிப்பெறும் என சி வோட்டர், இந்தியா டுடே நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் முடிவில், தமிழ்நாட்டில் திமுகவும், மத்தியில் பாஜகவும் அசுர பலத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது....

Feb 14, 2025 - 17:47
Feb 14, 2025 - 17:47
 0
இப்பவே நாடாளுமன்றத் தேர்தல்...  அசுர பலத்தில் திமுக, பாஜக!    X ஃபேக்டராக உருவெடுக்கும் தவெக?
இப்பவே நாடாளுமன்றத் தேர்தல்... அசுர பலத்தில் திமுக, பாஜக! X ஃபேக்டராக உருவெடுக்கும் தவெக?

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, 39 இடங்களிலும் வெற்றிப் பெற்று அசத்தியது. அதன்படி திமுக 22 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும், கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் 8 இடங்களையும் வென்றன. 39 தொகுதிகளில் மொத்தம் 47 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைத்தது. அதேநேரம், அதிமுக தலைமையிலான கூட்டணி,  மற்றும் பாஜக தலமையிலான கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை. அதிமுக கூட்டணிக்கு 23 சதவீதம் வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 18 சதவீதம் வாக்குகளும் கிடைத்தன.        

இந்த சூழலில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால், திமுக கூட்டணியில் வாக்கு சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. தற்போது தேர்தல் நடந்தால் திமுக கூட்டணி, 39 தொகுதிகளின் வெற்றியை தக்க வைப்பதோடு, கூடுதலாக 5 சதவீதம் வாக்குகள் பெற்று, மொத்தம் 52 சதவீதம் வாக்குகளை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக கூட்டணிக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்றாலும், 3 சதவீதம் வாக்கு அதிகரித்து, 21 சதவீதம் வரை வாக்குகளை பெறும் என்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

அதேவேளையில் தமிழ்நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சியுமான அதிமுக-வின் வாக்கு வங்கி மேலும் சரிவை நோக்கிச் செல்வதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி முந்தைய தேர்தலில் 23 சதவீத வாக்குகளை பெற்ற அதிமுக கூட்டணி தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்று இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


இதனிடையே 2026 சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் தவெகவுக்கு 15 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய அளவில் விஜய்யின் தவெக கவனம் ஈர்க்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டில் அக்கட்சி மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதனால், 2026 தேர்தல் களத்தில், விஜய் X பேக்டராக வலம் வருவார் என கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இந்த நிலவரம் என்றால், மத்தியில் பாஜக கூட்டணி அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 44 சதவீதம் வாக்குகளை பெற்று, 292 இடங்களில் வென்றது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, 232 இடங்களில் வெற்றிப் பெற்றது. 

இந்நிலையில், தற்போது தேர்தல் நடந்தால், கூடுதலாக 3 சதவீதம் வாக்குகளுடன், பாஜக கூட்டணி 343 தொகுதிகளை கைப்பற்றலாம் என்றும். முக்கியமாக பாஜக மட்டுமே 281 இடங்களில் தனித்து வெற்றி வாகை சூடும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், கடந்த தேர்தலில் 232 இடங்களில் வென்ற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, 188 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றிருந்த நிலையில், இப்போது தேர்தல் நடந்தால் 78 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. 

திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அக்கட்சிக்கு மக்களிடம் ஆதரவு அதிகரித்துள்ளதாகவே கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கருத்துக் கணிப்பு, வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பலத்தோடு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆனால், திமுகவுக்கு எதிராக அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி, புதிதாக விஜய்யின் தவெக ஆகியவை தனித்தனியாக களமிறங்குகின்றன. தற்போதைய நிலவரப்படி இது, திமுகவுக்கே சாதகமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow