பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி ஆறாட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  நாளை கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.

Apr 1, 2025 - 19:28
 0
பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!
பங்குனி ஆறாட்டு திருவிழா.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருவிழாக்களில் பங்குனி ஆறாட்டு விழா மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.  இந்த வருட திருவிழா நாளை ( ஏப்.2 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது .நடையை தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தி பின் ஆழிகுண்டத்தில் தீ மூட்டினார். பின் பக்தர்கள் 18 படி வழியாக ஏறி சாமி தரிஅனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

 நாளை ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கும். பின்னர், காலை 9.45 மணிக்கும் 10.45 மணிக்கும் இடையே தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, ஏப்ரல் 10ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டையும், மறுநாள் (11ம் தேதி) பம்பையில் ஐயப்பனுக்கு ஆறாட்டும் நிகழ்வுடன் 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.

சபரிமலையில், வழக்கமாக திருவிழா முடியும் அன்று சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். ஆனால் இவ்வருடம் திருவிழாவை ஒட்டி சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோயில் நடை இன்று முதல் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும். ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷுவை முன்னிட்டு கனி காணும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். 

சித்திரை விஷு பூஜைகள் முடிந்த பின்னர் ஏப்ரல் 18 ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.  பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. வரும் 18ம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு நாளன்று மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். இருமுடிக் கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow