சீமானுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்.. நாதக நிர்வாகி எடுத்த அதிரடி முடிவு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாதக நிர்வாகி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக 12 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 27-ம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து சீமான் வீட்டில் காவல்துறையினரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அந்த நோட்டீஸை அகற்றிய சீமான் வீட்டு காவலாளி, உதவியாளர் மற்றும் காவல்துறைக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
இந்த சூழலில் 'பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திராவிடர் பெரியார் கழகம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், சீமானுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அய்யனார் என்பவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.
ஆனால் அவரை குற்றவாளி போல தவறாக சித்தரித்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் பெரியார் கழகத்தின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது போன்று சீமானை இழிவுப்படுத்தும் வகையில் செயல்படும் திராவிடர் பெரியார் கழகத்தின் தலைவர் மா.பா.மணி அமுதன் மீது காவல்துறை சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல்துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கு, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதுமட்டுமல்லாமல் சீமான் வீட்டில் பெரியார் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






