ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்கதையாகி வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Jan 6, 2025 - 15:38
Jan 6, 2025 - 15:38
 0
ஆளுநர் யாராக இருந்தாலும் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்
ஆளுநர் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் - விஜய்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்  தொடங்கியதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

அதாவது, முதலில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் இருந்து வந்த மூன்று நிமிடத்தில் வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டாவது ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக தனது உரையை வாசிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வந்த வேகத்தில் ஆளுநர் வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்,  ஆளுநர் சட்டப்பேரவை மரபை பின்பற்றியே ஆக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் பாடப்படுவது தமிழகச் சட்டமன்றத்தின் ஆண்டாண்டு கால மரபு. பொன்விழா கண்ட தமிழகச் சட்டமன்றத்தின் மரபு எந்நாளும் காக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாகி வருகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். மக்கள் பிரச்சனைகள் குறித்தான விவாதங்களே இடம் பெற வேண்டும்.

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், அதன் நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் நேரலை ஒளிபரப்பை நிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஜனநாயக முறையில் நடைபெறும் விவாதங்களை, வெளிப்படையாகத் தமிழக மக்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

எனவே சட்டமன்ற நிகழ்ச்சிகள் முழுவதையுமே எந்தவித இடையூறும் இல்லாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow