யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை.. உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கம்
ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு, கேரள வனப்பகுதியில் தண்டவாளங்களை கடக்கும் யானைகள், ரயில் மோதி உயிரிழப்பதை தடுக்க கோரி திண்டுக்கல்லை சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள், சதிஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாடு, கேரள வனத்துறையுடன் இணைந்து கோவை, பாலக்காடு வனப்பகுதிகளில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், யானைகள் ரயில் தண்டவாளங்களை கடக்கும் 11 இடங்கள் கண்டறிப்பட்டது.
அதில் 9 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு யானைகள் கடக்க வழி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதே போல் போத்தனூர் மதுக்கரை ஆகிய பகுதியில் ரயில் தண்டவாளங்களில் யானை நடமாட்டத்தை கண்டறியும் வகையில் சென்சார் கேபிள்கள் (IDS system) பொருத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் 12 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு கோபுரங்களிலும் 2 அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அதி நவீன் கேமராக்கள் யானைகள் ரயில் தண்டவாளங்களில் இருந்து 150மீ தொலைவில் வந்தால் உடனடியாக, அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளருக்கு மற்றும் ரயில் ஓட்டுனருக்கு தகவல்களை அனுப்பும் வகையில் செயல்படும எனவும் தெரிவித்தார்.
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால், யானைகள் ரயிலில் மோதி உயிரிழப்பது வெகுவாக குறைந்துள்ளது என்றும்
கடந்த 2022 ம் அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை பாலக்காடு போத்தனூர் ரயில் வழித்தடங்களில், கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானை உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை என தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
What's Your Reaction?






