76-வது குடியரசு தினம்.. டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் திரௌபதி முர்மு
76-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று (ஜன 26) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் குடியரசு தின விழா களைக்கட்டியது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ ஆகியோர் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளர்கள் உடன் குதிரை வண்டியில் கடமைப் பாதைக்கு வந்தனர்.
அப்போது பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோவை வரவேற்றார். தொடர்ந்து, டெல்லி கடமைப் பாதையில் 21 குண்டுகள் முழகங்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் நடைபெற்ற பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் ஆகியவை நடைபெற்றன. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக போர் நினைவிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். இவரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார். அந்த வகையில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ பங்கேற்றார். 73 வயதான பிரபோவா சுபியாண்டோ முன்னாள் ராணுவ தளபதி ஆவார். கடந்த அக்டோபர் மாதம் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?