2 குழந்தைகள் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆந்திர அரசு புதிய மசோதா
ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற இரண்டு மசோதாக்களை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேறியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதியற்றவர்கள் என்ற விதியை ஆந்திர அரசு திருத்தம் செய்துள்ளது. ஆந்திரப் பஞ்சாயத்து ராஜ் (திருத்தம்) மசோதா, 2024 மற்றும் ஆந்திர நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) மூலம் நிறைவேற்றியுள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், மே 1994 ஆம் ஆண்டு, ஆந்திரப் பிரதேச சட்டமன்றம், கிராம பஞ்சாயத்துகள், மண்டல் பிரஜா பரிஷத்கள் மற்றும் ஜில்லா பரிஷத்களுக்குத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு 2 குழந்தை விதிமுறையை கட்டாயமாக்கும் திருத்த மசோதாவை நிறைவேற்றியது. இதனால் இரண்டு குழந்தைகள் உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற நிலைக்கு ஆளாகினர். தற்போது, முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இந்த மசோதாவை திருத்தம் செய்து ஆந்திர அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு, பெண்கள் மற்றும் குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவதற்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரம் என்றும், இது பொருளாதார கட்டாயம் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி வருவது குறிப்படத்தக்கது. மேலும், தென்மாநில மக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அண்மையில் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS-5) 2019-21 இன் படி, ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களிடையே (15-49 வயது) மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.7 குழந்தைகளாக உள்ளது. இதன்படி NFHS-4 (2015-16) மற்றும் NFHS-5 இடையே கருவுறுதல் 0.2 குழந்தைகளாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண்ணுக்கு 1.47 குழந்தைகள், மற்றும் கிராமப்புறங்களில், ஒரு பெண்ணுக்கு 1.78 குழந்தைகள், இரண்டும் மாற்று நிலைக்குக் கீழே உள்ளது.
"குறைந்து வரும் கருவுறுதல் விகிதங்கள், மக்கள்தொகை உறுதிப்படுத்தல் மற்றும் மாறிவரும் சமூக-பொருளாதார நிலைமைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உள்ள பிரிவுகளை நீக்கி ஆந்திர அரசு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் இனி போட்டியிட முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?