ஐந்து பேரோடு வாழ்பவர்கள் வடநாட்டவர்கள்.. இதுதான் உங்க நாகரீகம்.. துரைமுருகன் விமர்சனம்
வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திணிப்பு, நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் காட்பாடி தொகுதி இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சுப. வீரபாண்டியன் பேசியதாவது, “நம்மை பார்த்து அநாகரிகமானவர்கள் என அநாகரிகமானவர்கள் சொல்கிறார்கள். உத்திரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட ஆங்கிலேயே அதிகாரி லால்ஹாகிப் என்பன் போன்று வேடம் அணிந்து ஒருவனை வண்டியில் உட்கார வைத்து ஏழு கிலோ மீட்டருக்கு செருப்பால் அடித்துச் செல்வதும், இதனால் வழியில் உள்ள மசூதிகள் மூடப்படுவது தான் உங்கள் நாகரீகமா? அந்த மாதிரியான நாகரிகத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
நிர்மலா சீதாராமன் டெல்லிக்கு போனாலும் ஸ்ரீரங்கத்து மாமியாகத்தான் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு பெரியாரை பார்த்தால் ஆகவில்லை. அவருக்கு நிதிநிலை அறிக்கை தெரிகிறதோ இல்லையோ பெரியாரை பற்றி பேசுவது தான் வேலை. நீங்கள் அமெரிக்க அதிபர் டிரம்பை வேண்டுமானாலும் அழைத்து வந்து பேசுங்கள் ஆனால் தந்தை பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும் அழிக்க முடியாது.
இப்போது கணக்கெடுப்பு எடுத்தால் நமக்கு 25 நாடாளுமன்ற தொகுதிகள் தான் வரும். அப்படி வந்தால் தென்னிந்தியாவில் தமிழகம் காணாமலேயே போய்விடும். தென்னிந்தியாவின் குரல் நசுக்கப்படும். மக்கள் தொகையை குறைக்க சொன்னது யார்? மத்திய அரசு தான். கரூர் அருகே உள்ள கோவிலில் பார்ப்பனர்கள் உண்டு முடித்த பிறகு நம்மை போன்றவர்கள் எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் வரவேண்டும் என்பது பழைய மரபு.
அதனை எதிர்த்து பாண்டியன் என்பவர் வழக்கு தொடுத்தார். அதற்கு மதுரையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எச்சில் இலையில் அங்க பிரதட்சணம் செய்வது மரபு, அதில் தவறு இல்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் நாகரிகமான தமிழகம் தான் மேல்முறையீடு செய்தது. ஜி. ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பு செல்லாது என, இப்படி தீர்ப்பு வாங்கி கொடுத்த நாகரீகம் எங்கள் நாகரீகம்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நாகரீகம் தான் எங்கள் நாகரீகம். 2,400 கோடியை மறுத்தால் என்ன, பத்தாயிரம் கோடியை கொட்டி தருவது என்றாலும் ஒரு நாளும் உனக்கு அடிபணிய மாட்டோம் என்று சொல்லுகிற நம் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என சுப.வீரபாண்டியன் பேசினார்.
இறுதியாக அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “சுப.வீரபாண்டியன் பேசும்போது அவால் அப்படித்தான் என்பதை உங்களுக்கு சுருக்கமாக சொல்லி இருக்கிறார். அதன் கருத்து அதுதான். ஒரு மந்திரி சபையில் நம்மை பார்த்து காட்டுமிராண்டி என சொல்கிறான் என்றால் என்ன கொழுப்பு இருக்கணும். பாண்டிய மன்னன் இறந்து போன போது தன்னுயிர் கொண்டு உயிரை மாய்த்தவள் அவர் மனைவி.
அது மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழ்பவர்கள் நாங்கள். வடநாட்டவர் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு 4, 5 பேரோடு வாழ்பவர்கள். இது உங்க நாகரீகம். நாற்றம் பிடித்த மாட்டை தொட்டுவிட்டு வருபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக தருகிறேன் என அறிவித்தான் ஒருத்தன்.
தமிழன் போனான், ஆந்திராக்காரன் போனான் முடியவில்லை பிறகு வடநாட்டுக்காரன் போனான் இவனுடைய நாற்றத்தை தாங்க முடியாமல் அந்த மாடு ஓடிவிட்டது. அந்த மாதிரி குளிக்காத பரம்பரை உங்கள் பரம்பரை. ட்ராமா கம்பெனி மாதிரி ஒன்று சேர்ந்த கூட்டம் அது. தமிழர்களுக்கு அரசியல் சொல்லித் தர வேண்டுமா?” என அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
What's Your Reaction?






