அரசியல்

முக்கிய பிரமுகர்களை சந்தித்த செந்தில் பாலாஜி.. கண் கலங்கிய ஜோதிமணி எம்.பி.

ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் சந்தித்து உரையாடினர்.

முக்கிய பிரமுகர்களை சந்தித்த செந்தில் பாலாஜி.. கண் கலங்கிய ஜோதிமணி எம்.பி.
செந்தில் பாலாஜியை சந்தித்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், 2011ஆம் ஆண்டு முதல், 2015ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு, வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் 47 பேர் மீது நான்கு வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் தீர்ப்புக்காக இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, 471 நாள் சிறைவாசம் நிறைவடைந்ததை அடுத்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார். புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, “அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கில், சட்ட ரீதியாக சந்தித்து நிச்சயம் வெளிவருவேன்” என்றார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தனர். அதன்படி, இன்று செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, சென்னையில் தனியார் உணவு விடுதியில் தங்கி இருந்த செந்தில் பாலாஜியை திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், முத்துச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செந்தில் பாலாஜியுடன் கண்கலங்க உரையாடினார்.