தமிழ்நாடு

Accident: கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்... மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Accident: கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ்... மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
மினி பஸ் விபத்தில் 4 பேர் பலி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரத்தில், மினி பஸ் கவிழ்ந்ததில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தில் இருந்து, காலை 8:20 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்துர் நோக்கி மினி பஸ் ஒன்று புறப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வளைவில் திரும்பியபோது, மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் மினி பஸ் சாலையை விட்டு பல அடி தூரம் இழுத்து செல்லப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 12ம் வகுப்பு மாணவரான நிதிஷ் குமார் (17), ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சதீஷ் குமார் (20), 10ம் வகுப்பு படித்து வந்த வாசுராஜ் (15), தனியார் பல்கலை ஊழியரான மாடசாமி (28) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து நடந்த சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியானது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

மேலும் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையடுத்து மினி பஸ் ஓட்டுநரான நிதிஷை போலீஸார் கைது செய்தனர். குறுகலான சாலையில் வேகமாக சென்றதால் விபத்து நடந்ததா அல்லது மினி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி சென்றதுதான் இதற்கு காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.