காங்கிரஸ் தலித்களுக்கு ஏதும் செய்யவில்லை.. மேடையில் போட்டுடைத்த பா.ரஞ்சித்.. செய்வதறியாது திகைத்த ரஞ்சன் குமார்!

காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Jul 21, 2024 - 09:38
 0
காங்கிரஸ் தலித்களுக்கு ஏதும் செய்யவில்லை.. மேடையில் போட்டுடைத்த பா.ரஞ்சித்.. செய்வதறியாது திகைத்த ரஞ்சன் குமார்!
pa ranjith speech about congress

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூரில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பரபரப்பான சென்னை மாநகரில் அதுவும் காவல் நிலையத்துக்கு அருகில் நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கியது.

இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையம் சார்பில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்  பேரணி சென்னையில் நேற்று நடந்தது. சென்னை எழும்பூர் லென்ஸ் கார்டன் சாலையில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை நடந்த இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் நடந்த பேரணியில் நடிகர் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் நீண்ட நேரம் உரையாற்றிய இயக்குனர் பா.ரஞ்சித் தனது ஆதங்கம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கூறிய அவர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் விட மாட்டோம்; சட்ட போராட்டங்கள் நடத்துவோம் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து ஆக்ரோஷமாக பேசிய அவர், ''தலித் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து நாங்கள் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் எங்களை பாஜகவின் பி டீம் என்கின்றனர். நாங்கள் பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள். பாஜக ஒருபோதும் இங்கு காலூன்ற முடியாது. நாங்கள் காலூன்ற விட மாட்டோம்'' என்று விளக்கம் அளித்தார்.

மேலும் திமுக அரசை கடுமையாக சாடிய பா.ரஞ்சித், ''தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதான் சமூகநீதி மாடலா? சென்னை மக்களின் அன்பை பெற்ற அண்ணன் ஆம்ஸ்ட்ராங் உடலை சென்னையில் அடக்கம் செய்ய திமுக அரசு மறுத்தது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஆம்ஸ்ட்ராங்க்கு சென்னையில் மணிமண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதன்பிறகு திமுக மட்டுமின்றி அனைத்து கட்சிகள் மீதும் விமர்சன கணைகளை தொடுத்த பா.ரஞ்சித், ''நான் திமுகவிற்கு எதிராக மட்டும் பேசவில்லை. அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராகத் தான் பேசுகிறேன். அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரஸ் தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்று நீதிக்கட்சிக்கு மாறினோம். பின்னர் திமுக, அதிமுக என மாறி, மாறி வாக்களித்து வருகிறோம். ஆனால் எந்த கட்சிகளும் எங்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை'' என்று குற்றம்சாட்டினார். 

''சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எப்பொழுது ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக குரல் கொடுப்பீர்கள்? அப்படி குரல் கொடுக்கவில்லை என்றால் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள்'' என்று அவர் ஆவேசமாக பேசி முடித்தார். 

பா.ரஞ்சித் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மீதும் சரமாரியாக குற்றம்சாட்டியபோது, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எஸ்.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரஞ்சன்குமார் அதே மேடையில்தான் இருந்தார். பா.ரஞ்சித் பேசியதை கேட்டு அவர் செய்வதறியாது திகைத்தார். 

மேடையில் தனது முன்னிலையில் காங்கிரஸ் மீது பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரஞ்சன்குமார் இது தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஞ்சன்குமார் தொடர்ந்து மவுனமாக இருப்பதன்மூலம், காங்கிரஸ் மீதான பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? என்று நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து ரஞ்சன்குமார் பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow