கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை - 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!
கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதி தற்கொலை செய்து கொண்ட போது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சிறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகளும், 500 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தமிழகத்தில் இருந்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளும் உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கொலை குற்ற வழக்கில் தண்டனை பெற்று கைதியாக உள்ள 33 வயதுடைய ஏசுதாஸ் என்பவர் கடந்த 27 ம் தேதி சிறையில் உள்ள தொழிற் சாலையில் வேலை செய்து, பின்னர் அங்கு உள்ள கழிவறைக்கு சென்று உள்ளார்.
அப்பொழுது கழிவறையில் மயங்கி விழுந்து உள்ளதாக சிறையில் உள்ள காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏசுதாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உடற்கூறு ஆய்வறிக்கையில், கழுத்தின் எலும்பு அழுத்தியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஏசுதாஸ் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து, சிறைத் தொழிற் சாலையில் உள்ள கழிவறையில் கைதி மயங்கி விழுந்து உயிரிழந்தாக கூறப்படும் நிலையில், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் சிறை பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கோவை மத்திய சிறையில் துணைய அலுவலர் மனோரஞ்சிதம், உதவி அலுவலர் விஜயராஜ், தலைமை காவலர் பாபுராஜ், முதல் நிலைக் காவலர் தினேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?