வீடுகள் மீது வந்து விழும் கற்கள்.. நள்ளிரவில் குட்டிச்சாத்தானா?.. திகிலில் திருப்பூர்

வீட்டின் மீது வந்து விழும் கற்களால் தூக்கத்தை தொலைத்திருக்கின்றனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள். ஒட்டப்பாளையம் கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை வீடுகளின் மேல் கற்கள் வந்து விழுவதால் திகிலில் உறைந்து போயுள்ளனர்.கற்களை வீசுவது குட்டிச்சாத்தனாக இருக்கலாம் என அச்சத்துடன் கூறுவதால் அதிகாரிகள் இரவு பகலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Jul 9, 2024 - 16:46
Jul 9, 2024 - 17:33
 0
வீடுகள் மீது வந்து விழும் கற்கள்.. நள்ளிரவில் குட்டிச்சாத்தானா?.. திகிலில் திருப்பூர்
Kutty Sathan Stone Pelting on House in Tiruppur District

இரவு நேரமானாலே எல்லோரும் டிவி சீரியலில் மூழ்கி விடுவார்கள். ஒட்டப்பாளையம் கிராம மக்களோ இரவு நேரத்தில் எந்த வீட்டின் மீது எப்போது கற்கள் விழும் என்று அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். வீடு வீடாக கற்கள் விழுந்து 9 வீடுகளில் ஓடுகள் உடைந்து சேதமடைந்துள்ளது. ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூக்கத்தை தொலைத்துவிட்டு கற்களை யார் வீசியது என தேடியும் யாரும் சிக்கவில்லை. இது குறித்து படியூர் ஊராட்சி மற்றும் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இரவு நேரத்தில் விழுந்த கற்களால் பீதியடைந்த மக்கள் அருகில் உள்ள கருப்பராயன் கோயிலில் தங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். 

அந்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர், காங்கேயம் போலீஸார் சம்பவ இடத்தில் இருக்கும் போதே கற்கள் வந்து விழுகிறது, அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிறார்கள். இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் கிராமத்தின் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு கிரேன்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. 

இதுகுறித்து மக்கள் கூறுகையில் எத்தனை நாளைக்குத்தான் கல்லடி வாங்குவது, வேறு ஊருக்கு சென்றுவிடலாம் போலிருக்கிறது. 15 நாட்களுக்கு மேலாக நாங்களும் தூக்கத்தை தொலைத்து யார் கல் வீசுகிறார்கள் என பார்த்தோம். ஆனால் எதுவும் தெரியவில்லை. இனியாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நேரங்களிலும் டிரோன் கேமரா மூலமும் கிராமத்தை கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கண்காணித்தும் கற்கள் விழுகின்றன. அந்த கல் எங்கிருந்து விழுகிறது என தெரியவில்லை. சத்தியமாக இது குட்டிச் சாத்தான் வேலை தான் என அடித்துச் சொல்கின்றனர் கிராம மக்கள்.

கல் வீசுவது மனுஷனா இல்லை குட்டிச் சாத்தானா என  காவல்துறையினர் விரைந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். முண்டாசுப்பட்டி படத்தில் ஒவ்வொரு வீட்டு கதவிலும் "திரும்பிப் போ" என்று எழுதி வைத்திருப்பார்கள். இரவு நேரத்தில் உலா வரும் ரத்தக்காட்டேரிகள் அதைப் படித்து விட்டு திரும்பி போய் விடும் என்ற நம்பிக்கையில் அப்படி எழுதியிருப்பார்கள்.  கல்லெறிவது குட்டிச்சாத்தானா அல்லது சேட்டைக்கார மர்ம நபர்களா? காவல்துறையினர்தான் கண்டறிய வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow