பெண்களின் சபரிமலை: கொடியேற்றத்துடன் தொடங்கிய மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பெண்கள் இருமுடி கட்டுடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம், கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பகவதியம்மன் கோயில் திருவிழாவின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு மாசி கொடை விழா இன்று (மார்ச் 2) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல், தமிழகம், கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி தரிசனம் செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் அம்மனுக்கு மூன்று கால பூஜைகள் நடைபெறும். மேலும், வெள்ளி பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெறும். பத்தாவது நாள் இரவு (மார்ச் 11) முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடையும். அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது
What's Your Reaction?






