ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Mar 2, 2025 - 13:10
Mar 2, 2025 - 13:14
 0
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து
மு.க.ஸ்டாலின்-இளையராஜா

தமிழ்  திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. 1976-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 45 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். 80-ஸ், 90-ஸ் கிட்ஸுகளாக இருந்தாலும் சரி 2கே (2K) கிட்ஸுகளாக இருந்தாலும் சரி அனைவரும் சோகம் என்றாலே இளையராஜா இசையில் மூழ்கி விட ஆரம்பித்துவிடுவார்கள். 

இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் பல இயக்குநர்கள் ஏக்கத்துடன் வலம் வருகின்றனர். 80 வயதானாலும் இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இளையராஜா உலா வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிம்பொனி உட்பட பல புதிய முயற்சிகளையும் விட்டு வைக்கவில்லை. 

அதாவது, இசையமைப்பாளர் இளையராஜா தற்போது 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கி முடித்துள்ளார்.  இதற்கு ‘வேலியண்ட்’ (Valiant) என்று பெயரிட்டுள்ளார். இந்த சிம்பொனியை வரும் 8-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜாவின் அரங்கேற்ற உள்ளார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை செய்ய உள்ள இளையராஜாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று அங்கு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா. தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். 

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow