'நீதிபதி பெயரை களங்கப்படுத்துகிறது’ - ஜெய்பீம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

’ஜெய்பீம்’ பட வழக்கு தொடர்பான விசாரணையில் போலீஸின்  இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர். 

Nov 26, 2024 - 06:02
Nov 26, 2024 - 06:03
 0
'நீதிபதி பெயரை களங்கப்படுத்துகிறது’ - ஜெய்பீம் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஜெய்பீம் திரைப்பட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை '2 டி' எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், தங்களது வாழ்கை கதை உரிய அனுமதியின்றி திரைப்படமாக்கப்பட்டு உள்ளதாகவும், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொளஞ்சியப்பன் சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,  விரைந்து விசாரணை நடத்தி மூன்று மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, இரண்டு வாரத்திற்கு முன்பு காப்புரிமை சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் இறுதி அறிக்கையை சாஸ்திரி நகர் போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு சைதாப்பேட்டை 9-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு தொடர்ந்த கொளஞ்சியப்பன் தரப்பில் வழக்கறிஞர்கள் பாரி, எழில்கதிர் வர்மன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, காவல்துறையின் இறுதி அறிக்கையில் முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக வாதங்கள் முன் வைக்கப்பட்டது. மேலும்,  உண்மை சம்பவ வழக்கு ஆவணங்களை வழக்கை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவு இருக்கிறது.

ஆனால் சாஸ்திரி நகர் போலீசாரின் இறுதி அறிக்கையில், ஓய்வு பெற்ற சந்துரு, திரைப்பட இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து தான் திரைக்கதையை உருவாக்கி உள்ளதாகவும், ஓய்வு பெற்ற சந்துரு மூலம்தான் கதை கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு கொளஞ்சியப்பன் தரப்பு வழக்கறிஞர்கள் பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி உள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் போது ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு எப்படி அந்த வழக்கு விவரங்களை தெரிவித்து இருப்பார்?

போலீஸின் இறுதி அறிக்கை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இடம் பெற்றுள்ளதாக கொளஞ்சியப்பன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow