சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கின் விசாரணையின் தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை துவங்கியுள்ளதாக  காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Jan 28, 2025 - 15:21
 0
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு.. புலன் விசாரணை தொடக்கம்
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கில் புலன் விசாரணை தொடங்கியது

சேலம் பெரியார் பல்கலைக்கழக  விதிகளை மீறி அரசு அனுமதி பெறாமல்  பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாக துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். 

இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகார்களின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். இதையடுத்து ஜெகநாதனை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,  வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம்  இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி, துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க: உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு.. வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நீதிபதி கேள்வி

இந்த தடையை நீக்க கோரி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது காவல்துறை தரப்பில் தடை நீக்கப்பட்டதால் மீண்டும் புலன் விசாரணை துவங்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ள காரணத்தினால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow