மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் திருப்பம்.. ஆயுள் கைதிக்கு ஜாமின்
மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை கோரிய விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதலமாண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த 1996ம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி அவர் கொல்லப்பட்டார். அதே கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு முதுநிலை மாணவரான ஜான் டேவிட்டின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டார். அவர் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டியெடுத்து ஆற்றில் வீசியெறிந்தார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் மூத்த மாணவரான ஜான் டேவிட்-டுக்கு, கடலூர் சிறப்பு நீதிமன்றம், 1998ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. 2001 ஆம் சென்னை உயர்நீதிமன்றம் நேரில் பார்த்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லையென்பதால் அனைவரும் ஆச்சர்யப்படும் படி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
2001 முதல் 2011 வரை ஜான் டேவிட் என்ன ஆனார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த 10 வருடத்தில் சென்னையில் உள்ள தனியார் கால் சென்டரில் போலி சான்றிதழ் மூலம் மேனேஜராக பணி புரிந்து உள்ளார்.
இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்த போதும், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி அவரின் தாயார் எஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், திட்டமிட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவரை கொலை செய்துள்ளதால் ஜான் டேவிட்-டை விட்டு முன்கூட்டி விடுதலை செய்ய முடியாது ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பதால் ஜான் டேவிட் முன்கூட்டி விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை ஜான் டேவிட்-டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
What's Your Reaction?