ஜிஎஸ்டி வரியை வரன்முறைப்படுத்த வேண்டும் - வணிகர் சங்க மாநில தலைவர் கொளத்தூர் ரவி வேண்டுகோள்
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏராளமான முரண்கள் உள்ள நிலையில், வணிகர்களும், மக்களும் கடுமையாக பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் ரவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்களது சங்கம் சார்பில் மே 5 ஆம் தேதி சென்னை மறைமலைநகரில் வணிக விரோத சட்டங்கள் எதிர்ப்பு மாநாடு நடத்த உள்ளோம். இதற்காக மண்டல வாரியாக முதல்கட்ட மாநாடு நடத்தி வருகிறோம். அதன்படி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் தென்மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
விவசாயமும், வணிகமும் சமூகத்தின் இருகண்கள். மத்திய-மாநில அரசுகள் வணிகர்களை கண்டுகொள்ளாமல் உள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏராளமான முரண்கள் உள்ளன. வணிகர்களும், மக்களும் கடுமையாக பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் வரன்முறைப்படுத்த வேண்டும்.
அன்னிய முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான மானியங்களைக் கொடுக்குகிறார்கள். ஆனால், சிறுவணிகர்களுக்கு எவ்வித சலுகையும் காட்டுவதில்லை. வங்கிகள் வங்கிக்கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுகின்றன. முத்ரா கடனுதவி திட்டத்தில் தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில வியாபாரிகளே அதிகம் பயனடைந்துள்ளனர்.
இலவசம் மூலம் எளிதாக வாக்குகளைப் பெறலாம் என்று கருதி, வணிகர்கள் நலனை புறந்தள்ளுகிறார்கள். தமிழகம் முழுவதும் 21 லட்சம் வணிக குடும்பங்கள் உள்ளன. வணிகர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ.500 இல் இருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தமிழக அரசு உடனே குறைக்க வேண்டும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏராளமான சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வட்டியில்லாமல் கடனுதவிவழங்க வேண்டும். சிறுவணிகர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
What's Your Reaction?