மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி

“அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், ஒரு திமுக நிர்வாகி; துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் மா.சு உடன் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?"  என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Dec 25, 2024 - 21:25
 0
மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி.. முதலமைச்சர்  பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி
முதலமைச்சர் பொறுப்பேற்பாரா? - அண்ணாமலை கேள்வி

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.

ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்.

அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது. தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.

தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது.

இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இப்போதாவது பொதுமக்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow