அறக்கட்டளை போர்வையில் மோசடி? சிக்கிய SCAM மன்னன்! சிக்கலில் காங்கிரஸ் பிரமுகர்?
பாதி விலைக்கு ஸ்கூட்டர், தையல் இயந்திரம், லேப்டாப் தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணத்தை திரட்டி 1000 கோடி ரூபாய் மோசடி செய்த நபரால் கேரளாவே ஆடிப்போயுள்ளது. இந்த மெகா SCAM நடந்தது எப்படி? மோசடிக்கு பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் யார்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

கேரளா மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். இவர் கடந்த சில வருடங்களாக பல்வேறு என்ஜிஓ அமைப்புகளுடன் சேர்ந்து, மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு ஸ்கூட்டர், லேப்டாப், தையல் எந்திரம் மற்றும் பொருட்களை பாதி விலைக்கு விற்று வந்துள்ளார்.
இதன்படி ஒரு சிலருக்கு 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டரை 60 ஆயிரம் ரூபாய்க்கும், 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ₹20 ஆயிரம் ரூபாய்க்கும், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்றுள்ளார். இந்த பொருட்களை வழங்கும் விழாக்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனந்து கிருஷ்ணன், கேரளா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இதற்காக அலுவலகங்களை திறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிலருக்கு அனந்து கிருஷ்ணனிடம் இருந்து பாதி விலைக்கு பொருட்கள் கிடைத்ததால், அதை நம்பி ஆயிரக்கணக்கானோர் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக யாருக்கும் பாதி விலைக்கு பொருட்கள் கொடுக்கப்படாமல் இருந்ததால், கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் குவியத் தொடங்கின. கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனந்து கிருஷ்ணன்மீது குவிந்த நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அனந்து கிருஷ்ணனை கைதும் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக அனந்து கிருஷ்ணன் நடத்திய மோசடி 1000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அனந்து கிருஷ்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக லாலி வின்சென்ட் என்ற காங்கிரஸ் பெண் நிர்வாகி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மூவாட்டுப்புழா நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனந்து கிருஷ்ணனை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதோடு, அனந்து கிருஷ்ணனின் 19 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த வங்கி கணக்கில் ரூ.450 கோடி பணம் சென்றடைந்துள்ளதாக போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவரின் அலுவலகத்திலுள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மோசடியில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி பெயர்களில் நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆனால் இதைத் தாண்டி, மீதமுள்ள தொகை எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது? என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மோசடியில் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.கள் பற்றிய தகவல்களை அமலாக்கத்துறை சேகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மெகா மோசடி குறித்தான விசாரணைகள் நடந்துக்கொண்டிருந்தாலும் இன்னும் ஏமாற்றப்பட்ட பொதுமக்களிடம் இருந்து வழக்குகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






