இந்தியா

ஒரு வருடம் சம்பளம் கிடையாது.. சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட சொமேட்டோ

ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒரு வருடம் சம்பளம் கிடையாது.. சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட சொமேட்டோ
zomato notice goes viral

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களில் சொமேட்டோ முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவுகளை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு ஆட்கள் தேவை என்று சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இதில் டுவிஸ்ட் வைக்கும் விதமாக தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் கிடையாது என்று தெரிவித்திருந்தது. மேலும், தேர்வு செய்யப்படும் நபர் 20 லட்சம் ரூபாயை சொமேட்டோவின் பீடிங் இண்டியா (FEEDING INDIA) அமைப்புக்கு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, 2-வது ஆண்டில் இருந்து வருடத்திற்கு 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்படும் என்றும் தேர்வு செய்பவர்கள் சொல்லும் தொண்டு நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், சொமேட்டோ நிறுவனத்தை சரமாரியாக சாடி வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பால் சொமேட்டோ நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் சர்சைகள் வெடித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இப்பதவிக்கு பலர் விண்ணப்பித்துள்ளனர். இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தீபிந்தர் கோயல் வெளியிட்ட பதிவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பதவிக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் தேர்வு செய்யபடுபவர்கள் நிதி வசதி இல்லாதவர்கள், நிதி இல்லை என்று பொய் கூறுபவர்கள், பகுதியளவு நிதி கொடுப்பவர்கள், முழு நிதியும் கொடுப்பவர்கள் என நான்கு குழுக்களாக பிரிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து,  இது வழக்கமான சலுகைகளுடன் இருக்கும் வேலை கிடையாது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஊதியம் பெறும் நோக்கில் இருக்கக் கூடாது.
கற்றல் வாய்ப்பிற்காக இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இது ஒரு கல்லூரியில் நீங்கள் படிக்கும் அனுபவத்தை விட 10 மடங்கு அதிகமான அனுபவத்தை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.