Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் காலமானார்..!
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (வயது 92) சிகிச்சை பலனின்றி காலமானார்.
முன்னாள் இந்திய பிரதமர், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர், காங்கிரஸ் மூத்த தலைவர் என்று பல்வேறு அடையாளங்களுடன் திகழ்ந்த டாக்டர். மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த டாக்டர்.மன்மோகன் சிங் வியாழக்கிழமை (டிச.26) இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் 1932 செப்டம்பர் 26-ல் பிறந்த மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1957-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார மேற்படிப்பை முடித்தார். 1962-ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற மன்மோகன் சிங் 1966 முதல் 1969 ஆம் ஆண்டு வரை ஐநாவில் பணியாற்றினார்.
பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றிய மன்மோகன் சிங் 1971-ல் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இணைந்தார். தொடர்ந்து அடுத்த வருடமே நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் 13வது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார். இந்தியாவின் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பின்னர் அதிக நாட்கள் பிரதமராக பதவி வகித்தவர் ஆவார் .
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?