அதிக அளவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..!
திருவாரூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதாகவும், போதிய கொள் முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுதும் 532 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுதும் சுமார் ஒரு லட்சத்து 492 ஹெக்டர் அளவிற்கு சம்பா சாகுபடியும், 39 ஆயிரத்து 443 ஹெக்டேர் பரப்பளவிற்கு தாளடி சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிர் கடந்த வாரங்களில் பெய்த பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விட்டது. தற்பொழுது இயந்திரம் மூலம் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடை செய்யும் நேரமும் அதற்குரிய செலவும் இரட்டிப்பாகிறது என விவசாயிகள் கூறுகின்றனர்.. மேலும், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையும் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மழையின் காரணமாக நெற்பயிர்கள் புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டு மகசூல் குறைந்துள்ளது இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மணக்கால் பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் சொல்லும் போது..."ஏற்கனவே பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரணம், காப்பீடு போன்றவை கடந்த நான்கு ஆண்டுகளாக தராமல் தமிழக அரசு இழுத்தடித்து வரும் நிலையில், கிடைக்கின்ற சொற்ப மகசூலையும் விவசாயிகள் விற்க முடியாமல் சாகுபடிக்காக வாங்கிய கடனையும் திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் அறுவடை செய்த நெல்லை கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டி உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் பயிர் நிவாரணம் மற்றும் போதிய நெல் கொள்முதல் நிலையங்களை
திறக்க முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
What's Your Reaction?