டிஜிட்டல் அரஸ்ட் மோசடி... மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது..!

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Jan 28, 2025 - 08:39
 0
டிஜிட்டல் அரஸ்ட் மோசடி... மூளையாக செயல்பட்ட 2 பேர் கைது..!

சென்னை காவல்துறையில் முதியவர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக 33 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த வழக்கு விசாரணையை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணையை ஆரம்பித்தது. இதில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் இருப்பதாக கூறி விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறை அதிகாரிகள் இதில் மூளையாக செயல்பட்ட இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். இருவரும் மிகப்பெரிய அளவில் பணப்பரிவர்த்தனைகளுக்கு உதவுவதற்கு மியுல் அக்கவுண்டுகளை உருவாக்கியது தெரியவந்துள்ளது. 

ஒருவர் கொல்கத்தாவிலும் மற்றொருவர் டெல்லியிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கைது செய்யப்பட்டவர் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சிக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த இருவரும் மியூல் வங்கிக் கணக்குகள் மட்டும் அல்லாது அவற்றை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி வெளிநாட்டுகளுக்கு அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்ததும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரிய சைபர் கிரைம் மோசடியில் டிஜிட்டல் அரஸ்ட் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு சைபர் கிரைம் கும்பலுக்கு சென்றடைகிறது. இதற்கு உடந்தையாக பல மியுல் அக்கவுண்டுகள் செயல்பட்டு வருகின்றன. தனிநபரோ அல்லது ஒரு போலியான நிறுவனமோ தனது பெயரில் வங்கி கணக்குகளை துவங்கி சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகின்றன இது போன்று சைபர் களின் மூலமாக கொள்ளை அடிக்கப்படும் பணம் என்பது இந்த மியுல் அக்கவுண்ட் வங்கிக் கணக்குகள் மூலமாக வெளிநாட்டில் இருக்கும் சைபர் கிரைம் கும்பலுக்கு சென்றடைகிறது.

அந்த வகையில் சென்னையின் ஒரு வழக்கு அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்ட போது அமலாக்கத்துறை இந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை கண்டுபிடித்தது. குறிப்பாக இந்தியா முழுவதும் மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் உத்தரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா என 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. 

இந்த சோதனையின் மூலம் பல செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், லேப்டாப்புகள் பல குற்றம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அமலாக்க துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இது போன்ற சைபர் கிரைமில் பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்குகள் மூலமாக கிரிப்டோ கரன்சிகளாக மாற்றப்பட்டும், அமெரிக்க டாலர்களாக மாற்றப்பட்டும் இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து முடக்கியுள்ளனர்.

இந்த மோசடி பணம் அனைத்தும் டிஜிட்டல் அரெஸ்ட் மட்டுமல்லாது பல்வேறு சைபர் கிரைம் மோசடிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்துள்ளது. இந்த வங்கி கணக்குகள் மூலமாக வெளிநாட்டில் உள்ள சைபர் கிரைம் கும்பலுக்கு சென்றடைவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த நபர்கள் கேஷ் டெபாசிட் மிஷின்களையும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இது போன்று மெஷின்களை பயன்படுத்தி பணத்தை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து பின்டெக் எனப்படும் நிதி தொடர்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணிப்பரிவர்த்தனைகள் மேற்கொள்வதும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பண பரிவர்த்தனைகளுக்கு வெளிநாட்டு நம்பர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக அமலாக்கத்துறை விசாரணையில் நிதி பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்கள் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களின் முழு தகவலையும்  பெறாமல் பணப்பதிவர்த்தனைகளை அனுமதிப்பதால் இதுபோன்று சைபர் கிரைம் மோசடி கும்பல்கள் உருவாக்கிய போலி நிறுவனங்கள் பணம் டெபாசிட் செய்வதற்கு உதவும் வகையில் இந்த பின்டெக் நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுவதையும் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இந்த மோசடிகளுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ள நிதி தொடர்பான தொழில்நுட்ப நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் தரகர்கள் மற்றும் அவர்களோடு கூட்டு வைத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் தொடர்பாகவும் அவர்கள் பயன்படுத்தும் வங்கி கணக்குகளையும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow