‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்

இலங்கை வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய பவுன்சர் பந்தை, தோனி சிக்ஸர் அடித்ததையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

Sep 10, 2024 - 18:04
Sep 11, 2024 - 09:48
 0
‘யாரு பவுன்சர் போட சொன்னது?’ - தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த சி.எஸ்.கே. வீரர்
தோனி அடித்த 100 மீ. சிக்ஸர்.. நினைவுகளை பகிர்ந்த துஷார் தேஷ்பாண்டே

கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் துஷார் தேஷ்பாண்டே. 2022ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டபோதிலும், அந்த சீசனின் முதற்பகுதியில் அதிகப்படியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

ஆனால், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பெர்ஃபார்மன்ஸை காட்டிய பிறகு, சென்னை அணியின் ஆஸ்தான பவுலராக கடந்த இரண்டு சீசன்களில் [2023, 2024] இருந்து வருகிறார். 2023ஆம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும், 2024ஆம் ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

அதிகப்படியான ரன்களை வாரி வழங்குபவராக இருந்தாலும், இக்கட்டான சூழ்நிலையில் முக்கியமாக விக்கெட்டுகளை சாய்ப்பதில் கில்லாடியாக திகழ்ந்து வருகிறார். 2023ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 51 ரன்கள் விட்டுக்கொடுத்து இருந்தார். அப்போது, கேப்டன் தோனி சில ஆலோசனைகளை வழங்கியதாக துஷார் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள அவர், “அந்த போட்டியில் 3.2 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து இருந்தேன். அப்போது தோனி என்னிடம் வந்து, நீ எந்த தவறையும் செய்யவில்லை. அனைத்துமே சிறப்பான பந்துகள் தான். இன்றைய நாள் உனக்கானதாக இல்லை. அடுத்தப் போட்டியிலும், நீ இதே போன்றே பந்துவீசு என கூறினார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேசப் போட்டிகளில் சாதனைகள் படைப்பேன் என்பதை தோனி முன்கூட்டியே கணித்திருந்தார் என்றும் தேஷ்பாண்டே தெரிவித்தார். இது குறித்து கூறுகையில், “சர்வதேச அளவில் வெற்றிபெற உங்களுக்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. ஆனால் உங்கள் பந்துவீசுவதற்கு ஓடிவருவதற்கு முன்பாக, நீ அமைதியாக இருக்க வேண்டும். கூட்டத்தில் கவனம் சிதற வேண்டாம். நன்றாக மூச்சை இழுத்துக்கொள், அமைதியடைந்த பின், பந்தை வீசு என்றார். அவர் அப்படி கூறியது போலவே, சாதனைகள் புரிந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, வலைப்பயிற்சியின் போதும், தோனி தெரிவித்த ஆலோசனையையும் துஷார் தேஷ்பாண்டே பகிர்ந்துள்ளார். தேஷ்பாண்டே கூறுகையில், “பயிற்சியின் போது, நான் நல்ல யார்க்கர்களை வீசிக் கொண்டிருந்தேன். ஆனால், திடீரென்று ஒரு பவுன்சரை வீசினேன். அந்த பந்தை 100 மீட்டர் தூரத்திற்கு தோனி சிக்ஸர் விளாசினார். அப்போது அவர் என்னிடம் வந்து, ‘உன்னை யார் பவுன்சர் வீசச் சொன்னது? எனக் கேட்டார்.

அதற்கு நான், யார்க்கர் வீசுவேன் என்று எதிர்பார்த்து இருப்பீர்கள். அதனால், நான் பவுன்சர் வீசினேன் என்றேன். அதற்கு தோனி, மனதிற்குள் கிரிக்கெட் விளையாடதே. யார்க்கர், யார்க்கர் தான். நீ யார்க்கர் வீசினால், உனது பந்தை யாரும் அடிக்க முடியாது என்று தெரிவித்தார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உடற்தகுதியில் முக்கியமானது. அதில் கவனம் செலுத்துங்கள் என்று அவர் என்னிடம் கூறினார்” என்று நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow