வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 30, 2024 - 03:01
Nov 30, 2024 - 04:13
 0
வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு
வீட்டு வேலைக்கு காவலர்களை பயன்படுத்தும் அதிகாரிகள்.. விசாரணை நடத்த டிஜிபிக்கு செய்ய உத்தரவு

காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழல் மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறை வார்டன்கள் மற்றும் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும்  அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி மற்றும் உளவுத்துறை உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

 இந்த வழக்கு  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், உள்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர், காவலர்களை வீட்டு வேலைக்கோ அல்லது தனிப்பட்ட வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டுமென டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்படும் சிறைக் காவலர்களை உடனடியாக சிறைப் பணிக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தவில்லை என அனைத்து அதிகாரிகளும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளதோடு, சிறைக் காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி உறுதி அளித்துள்ளதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow