TVKVijay: “வர்ட்டா மாமே டுர்ர்..” சைக்கிளில் தவெக மாநாட்டுக்கு கிளம்பிய பிரபலம்... நடுவுல இது வேறயா?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் சௌந்தரராஜாவும் அவரது குழுவினரும் சென்னையில் இருந்து சைக்கிளில் கிளம்பியுள்ளனர்.
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தவெக மாநாட்டில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் தவெக மாநாட்டில் கலந்துகொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர்கள் தாடி பாலாஜி, செளந்தரராஜா ஆகியோர் ஆரம்பம் முதலே விஜய்யின் தவெக மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கு, நடிகர் செளந்தரராஜா சைக்கிளில் கிளம்பியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் நடித்தது முதல் விஜய்க்கு ரொம்பவே நெருக்கமான செளந்தரராஜா, அவர் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து அதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே, தவெக கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகளை செய்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குறித்து தொலைக்காட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, நாளை (அக்.27) விக்கிரவாண்டியை அடுத்த விசாலையில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி சௌந்தரராஜாவும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை உறுப்பினர்களும், சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு சைக்கிளில் பேரணியாக செல்கின்றனர். சென்னையில் இருந்து இன்று காலை அவர்கள் சைக்கிளில் கிளம்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சௌந்தரராஜா தலைமையில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையைச் சேர்ந்த 250 பேர், சென்னையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். அதோடு போகும் வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கும் முடிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டியில் இந்த பேரணியை நிறைவு செய்துவிட்டு, தவெக மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். அங்கு தவெக தலைவர் விஜய்யை செளந்தரராஜா நேரில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அவருக்கும் மேடையில் பேச வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?