Thai Pournami 2025 : திருவண்ணாமலை தை மாத பெளர்ணமி.. ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு
Thai Pournami 2025 in Tiruvannamalai : அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தை மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Thai Pournami 2025 in Tiruvannamalai : பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆணி மாதத்தில் ஆணி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.
திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் தை மாத பெளர்ணமிக்காக திருவண்ணாமலையில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
தை மாத பௌர்ணமி நேற்று இரவு 7.59 மணிக்கு தொடங்கி இன்று இரவு 8.16 மணிக்கு முடிவடைவதால் சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று இரவு முதல் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது.
விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அதிகாலை முதலே குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது. அப்போது ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர்.
ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பும் நிலவியது.
What's Your Reaction?






