TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

Oct 23, 2024 - 16:15
 0
TN Rains: கோவை, மதுரையில் வெளுத்து வாங்கிய கனமழை... வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்!
கோவை, மதுரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை

சென்னை: கடந்த வாரம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வாரம் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், தற்போது கோவை, மதுரை மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. கோவையின் பல பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கோவை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 

மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்த நிலையில், கோட்டைப் பிரிவு பகுதியில் உள்ள ஏழு எருமை பள்ளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மத்தம்பாளையம் அருகே மருத்துவமனை சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர், வெள்ளத்தில் சிக்கினர். எனினும் அவர்கள் உடனடியாக காரைவிட்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல் அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு வந்த நபர்கள் நிறுத்தி வைத்திருந்த காரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் வடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

அதேபோல், மதுரையில் பெய்த மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்க் டவுன் கார்த்திக் நகர், ரோஜா வீதி உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு, மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மேலும், சாலைகளில் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் மழை நீர், சில வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு17,586 கன அடியிலிருந்து, 29,850 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்த நிலையில், தற்போது 100 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 64.85 டி.எம்.சியாக உள்ளது. இதேவேளையில், பாசன தேவைக்காக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீர்வரத்து 5,556 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 4,158 கன அடியாக இருந்த நிலையில், இன்று சரசரவென அதிகரித்துள்ளது. காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியாகவும், நீர் இருப்பு 21.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீடிக்கிறது. ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 3வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று, தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து நாளை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

டானா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், தீவிர புயலாக வலுப்பெறும் எனவும், நாளை மறுநாள் அதிகாலை ஒடிசாவின் புரிக்கும், சாகர் தீவுகளுக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் என இரண்டு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், டானா புயல் எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஒடிசா, மேற்குவங்கம் பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று (அக்.23) அக்.24, அக்.26 ஆகிய தேதிகளில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow